புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா இருந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் கருணாமூர்த்தி (28). இவர் 2018ஆம் ஆண்டு வாரிசு வேலை அடிப்படையில் ஆலங்குடி தாலுகா மாஞ்சான்விடுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகள் மாஞ்சான்விடுதியில் பணியாற்றியவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த தாலுகாவிற்று இடமாறுதலில் சென்று தற்போது பையூர் கிராம நிர்வாக அலுவலராக பணியில் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (28.01.2026 - புதன்கிழமை) மாலை இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பக்கத்தில் தேரடி அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்துள்ளார். அவருடன் மேலும் சில நபர்களும் இருந்துள்ளனர். மாலை 05.30 மணிக்கு மேல் கருணாமூர்த்தியின் சொந்த ஊரைச் சேர்ந்த பிரகாஷ், வெங்கடேசன் ஆகிய இருவரும் கருணாமூர்த்தி இலுப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இலுப்பூர் போலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் இலுப்பூர் போலீசார் பிரகாஷ், வெங்கடேசன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மது போதையில் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர். அதே போல இலுப்பூர், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரும் விசாரணை செய்து வருகின்றனர்.
இலுப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மாலையில் 4 பேர் வரை இருந்துள்ளனர். அப்படி அவர்கள் இருக்கும் போது பிரதான சாலை ஓரம், அருகிலேயே வருவாய்த்துறை அதிகாரிக்குச் சொந்தமான பல வாடகைக் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் பகுதியாக உள்ளதால் கருணாமூர்த்தி எப்படி தனியாகச் சென்று தூக்கு மாட்டி இருப்பார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது. ஆகவே அவருடன் இருந்தவர்களிடம் முறையாக விசாரணை செய்து சாவுக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் கருணாமூர்த்தியின் உறவினர்கள் கூறுகின்றனர். விசாரணை முடிவிலேயே உண்மை தெரிய வரும்.
Follow Us