ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கோணவாய்க்கால் என்ற பகுதியில் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலத்தின் கீழே கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் கீர்த்தனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களோடு இந்த தம்பதியினரின் 5 வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகளும் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (15.10.2025) இரவு இரு குழந்தைகளும் கொசுவலையில் உறங்க வைத்துவிட்டு பெற்றோர் இருவரும் கொசுவலைக்கு வெளியே உறங்கி கொண்டிருந்தனர்.
இதனையடுத்து இன்று (16.10.2025) காலை குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்த கொசுவலை அறுக்கப்பட்டிருந்தது. மேலும் ஒன்றரை வயது மகள் வந்தனா அங்கிருந்து காணாமல் போயிருக்கிறார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் நீண்ட நேரமாகக் குழந்தையைத் தேடினர். இருப்பினும் குழந்தையைக் கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து தான் பெண் குழந்தை கடத்தப்பட்டது உறுதியானது. அதாவது கொசுவலையை அறுத்து குழந்தையைத் தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெங்கடேசன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் உடனடியாக சித்தோடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தோடு காவல் துறையினர் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நிகழ்ந்த இடம் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அந்த வழியாகச் செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் நபர்கள் குறித்துக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் குழந்தை கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.