தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி (13.09.2025 - சனிக்கிழமை) அன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காகத் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பேசுவதற்கு தவெகவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர்.
அதனைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் தவெகவினர் கடிதம் கொடுத்தனர். ஆனால் அந்த இடத்திலும் விஜய் பேச அனுமதி அளிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகக் கடிதத்தில் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். அதேபோன்று 4 இடங்களில் ரோடு ஷோ மேற்கொள்ள விஜய் அனுமதி கோரியிருந்தார். அதற்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதே சமயம் ரோடு ஷோ நடத்தக்கூடாது எனக் காவல் துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்றுவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தால் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வது குறித்து ஆலோசிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. அதோடு தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் முடிவெடுத்திருந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us