தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே பாமக கட்சியின் உரிமை தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாகக் கருத்து ரீதியாக மோதல் நடைபெற்று வருகிறது. அதே சமயம் அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக - பாஜக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த முடிவிற்கு  ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisment

அதோடு கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கு மட்டுமே உள்ளதாகக் கூறி, அன்புமணியின் பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது மற்றும் நீதிமன்ற அவமதிப்பு என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராமதாஸ் அக்கட்சித் தொண்டருக்கு எழுதியுள்ள கடிதததில், “நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம். 

Advertisment

இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன. நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல்  வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை. உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். 

நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தில் அவர் வாகனம் என்பது அவர் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்பதற்காக அறிவிப்பாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Advertisment