சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் சென்னையில் இன்று (12.12.2025) போராட்டம் நடைபெற்றது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், “ஒவ்வொரு சமுதாயமும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கை எடுங்கள். அதனை ஏன் எடுக்கத் தயங்குகிறீர்கள். அதனால் உங்களுக்கு நன்மை தானே கிடைக்கும். உங்களுக்கு நல்ல பெயர் தானே கிடைக்கும். ஒவ்வொரு முதலமைச்சரும் ஒவ்வொரு கால காலகட்டத்திலே இட ஒதுக்கீடு கொடுத்தாலும் அது சரியாகப் பங்கிடப்படவில்லை என்ற நிலையிலே தான் இன்றைக்கு இந்த அறப்போராட்டத்தை நடத்துகிறோம்.
அதுவரையில் கோட்டைக்குப் போகாத நான், இது சம்பந்தமாகக் கோட்டைக்குச் சென்று முதலமைச்சரைச் சந்தித்து மற்ற அமைச்சர்கள் எல்லாம் அமர்ந்திருக்க, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட நிறையச் செயலாளர்கள் கூடியிருக்க நான் 35 நிமிடம் உச்ச நீதிமன்றத்திலே ஒரு நீதிபதியோ ஒரு வழக்கறிஞரோ வாதிடுவது போல 35 நிமிடம், அதாவது இன்னும் சொல்லப்போனால் இட ஒதுக்கீட்டை எப்படிப் பிரித்துக் கொடுப்பது. யார் யாருக்குக் கொடுப்பது என்று கூறினேன். இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. ஒரு மாதம், 2 மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலே இட ஒதுக்கீட்டைக் கொடுங்கள் என்று சொல்கின்றோம்.
இதனால் சில பேருக்குக் குடைச்சல் வரலாம். சில பேருக்குக் குமட்டலாம். சில பேர் வாந்தி எடுக்கலாம். அதற்காக சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கக் கூடாது. தமிழ்நாட்டிலே இது நடக்கக்கூடாது. தமிழ்நாடுதான் இந்தியாவுக்கு வழிகாட்டி என்று பெருமையோடு சொல்லுகின்றோம். கௌரவ தலைவர் ஜி.கே. மணி சொன்னது போன்று சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு தான். மறைந்த என்னுடைய நண்பர் கலைஞர் இட ஒதுக்கீடு பங்கீடு சம்பந்தமாக 7 நாள் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்குப் பிறகு என்னை அழைத்துப் பேசியபோது நான் விலாவாரியாக சொன்னேன். இதை எப்படி எல்லாம் பிரிக்கலாம் என்று சொன்னேன். அவர் அதைப் பார்த்து நான் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். ஆனால் இடையிலே அவர் பாராட்டினாலும் கூட ஒரு சிலர் அவரை தடுத்துவிட்டார்கள் ” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/ramadoss-mic-che-pro-2025-12-12-15-00-06.jpg)