“முதல்வரை சந்திக்க நேரம் கேட்கவில்லை” - ராமதாஸ் பேட்டி!

ramadoss-mic1

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைச்சுற்றல் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனையடுத்து அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில்  முதல்வர் மு.க. ஸ்டாலினை, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் நேற்று (31.07.2025) காலை சந்தித்துப் பேசினார். அடையாறு பூங்காவில் காலை நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ஓ. பன்னீர்செல்வம் நலம் விசாரித்ததாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது பிரேமலதா, முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது. அப்போது தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஸ், முத்த நிர்வாகிகளான பார்த்தசாரதி, ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று மாலை மீண்டும் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இதன் தொடர்ச்சியாக 2வது நாளாக இன்றும் (01.08.2025) நடைப்பயிற்சியின் போது முதல்வர் மு.க. ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் மீண்டும்  சந்தித்துப் பேசியிருந்தார்.

இத்தகைய சூழலில் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை. வைகோ எம்.பி. என அவரது கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர் ஒருவர், “முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்கு நேரம் (அப்பாயின்ட்மெண்ட்) கேட்டு இருப்பதாக சொல்ல்படுகிறதே?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “நான் கேட்கவில்லை” எனச் சுருக்கமாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார். அதே சமயம் பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. 

அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அரசியல் வட்டாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த பார்க்கப்படுகிறது. 

mk stalin pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe