தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே பாமக கட்சியின் உரிமை தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாகக் கருத்து ரீதியாக மோதல் நடைபெற்று வருகிறது. 

Advertisment

அதே சமயம் அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக - பாஜக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இந்த முடிவிற்கு  ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கு மட்டுமே உள்ளதாகக் கூறி, அன்புமணியின் பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது மற்றும் நீதிமன்ற அவமதிப்பு என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் (தரப்பு) தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (26.02.2026) நடைபெற்றது. 

Advertisment

இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பதாக செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “தேர்தலில் எப்படி பணியாற்றுவது?. என்ன மாதிரியாக யுக்திகள் கையாளுவது. நிர்வாகிகளுக்கு தெரிந்த யுக்திகள் எல்லாம் கேட்டு எல்லோரும் அதன்படி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதற்காக ஒரு கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி குறித்து இன்றைக்கே முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் அதற்கான களம் சரியாக அமையாது. அதனால் கூட்டணி  குறித்து நேரம் வரும்போது கூறுவேன்” எனத் தெரிவித்தார். 

ramadoss-pm-3
கோப்புப்படம்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், “திராவிட கட்சிகளோடு கூட்டணி இருக்குமா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ராமதாஸ், இருக்கும் என்பது போன்ற தொனியில் பதிலளித்தார். மேலும், வரும் 28ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். முன்னதாக ராமதாஸ் அக்கட்சித் தொண்டருக்கு எழுதியிருந்த கடிதததில், “உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல்  வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை. உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். 

Advertisment

நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம்” எனத் தெரிவித்திருந்தார். இந்த கடிதத்தில் அவர் வாகனம் என்பது அவர் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்பதற்காக அறிவிப்பாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.