பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இதற்கிடையில் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான பா.ம.க எம்எல்ஏ அருள், அன்புமணி மீது தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகிறார். இதற்கு எதிரொலியாக அருளை, பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அன்புமணி அறிவித்தார். ஆனாலும், ராமதாஸ் தலைமை தான் உண்மையான பா.ம.க என்றும் அந்த பா.ம.கவில் தொடர்ந்து இருப்பேன் என அருள் தெரிவித்தார். இதனால், அருள் மீது அன்புமணி கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சேலம் வாழப்பாடி அருகே பா.ம.க அருள் சென்ற காரை நடுவழியில் மறித்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பா.ம.க எம்.எல்.ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் சேலம் மாவட்ட, பெத்தநாயக்கம் பாளையத்திற்கு சென்றிருந்தார். அந்த நிகழ்வை முடித்து விட்டு வாழப்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது 50க்கும் மேற்பட்ட கும்பல், அருளின் காரை மறித்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
இதனை கண்ட அருளின் ஆதரவாளர்கள், உடனடியாக காரில் இருந்து இறங்கி தடுக்க முயன்றனர். ஆனால் ஆதரவாளர்கள் மீது, கட்டை மற்றும் கற்களால் அந்த கும்பல் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அருள் பாதுகாப்பாக மீட்கபட்டு சேலம் வந்தார். இந்த தாக்குதலில் அருளின் கார் தாக்கப்பட்டு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்கள் மீது காயம் ஏற்பட்டுள்ளது. பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் பா.ம.க எம்.எல்.ஏ அருள் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அருள், “நாங்கள் சேலத்தில் பொதுக்குழுவை நடத்தினோம். அந்த பொதுக்குழுவில் ராமதாஸுக்கு நிறைய வரவேற்பு கிடைத்தது. ஆர்ப்பரிப்பான கூட்டத்தை பார்த்தவுடன் அன்புமணியால் தாங்க முடியவில்லை. அந்த கூட்டத்திற்கு அருள் தான் காரணம் என்று என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். என்னை நோக்கி கத்தியை எடுத்து வருகிறார்கள். டேய், அன்புமணி உன்னை கொலை செய்ய சொல்லிட்டாருடா, இன்னைக்கு உன்னை கொல்றேண்டா என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.
டீசண்ட் அண்ட் டெவலமெண்ட் பாலிடிக்ஸ் என்று சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிற அன்புமணி, உன்னை கொலை செய்ய சொன்னாரு என்று கத்தியை எடுத்து என்னை நோக்கி ஓடி வருகிறார்கள். பெற்றெடுத்த தந்தையையே கொல்ல வேண்டும் என்று செயலாற்றிக் கொண்டிருக்கிற அன்புமணி, இன்றைக்கு என்னை கொலை செய்ய முயற்சிப்பதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை. வீட்டை விட்டு வெளியே வராத ஒரு இளைஞனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக்கியவர் ராமதாஸ். அப்படிப்பட்ட அவர் தான் 50 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இந்த கட்சிக்கு தலைவராக நியமிக்கிறார். அப்படிப்பட்ட ஒரு தலைவரை கொலை செய்ய வேண்டும் என்று கொடூர சிந்தனை உடையவர் அன்புமணி. அவர் கூட 25 வருடமாக தமிழ்நாடு முழுக்க போயிருக்கிறேன். அன்புமணிக்காக ஊர் ஊராக கொடியேத்திருக்கிறோம். அந்த ஏற்பாடுகளை செய்தவர்கள் இரண்டே பேர் தான், நானும், அறிவுச் செல்வனும். அறிவுச் செல்வன் இறந்துவிட்டார். அவரின் கொலைக்கான காரணத்தை விரைவில் வெளியிடுவேன்.
இதே மாதிரி என்னை சீண்டிக் கொண்டே இருந்தால் நான் பல உண்மைகளை சொல்வேன். அன்புமணியைப் பற்றி பல உண்மைகள் எனக்கு தெரியும். நான் கூடவே தான் இருந்தேன். என்னை சீண்ட வேண்டாம். இந்த மாதிரி மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். இது ஜனநாயக நாடு, மன்னராட்சி இல்லை. இங்கு நியாயம், நீதி, நேர்மை, சட்ட ஒழுங்கு இதெல்லாம் இருக்கிறது” என்று பரபரப்பாக பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/arul-2025-11-04-15-00-55.jpg)