PMK MLA Arul alleged Anbumani is stealing Ramadoss’s hard work
சேலம் வாழப்பாடி அருகே கடந்த 4ஆம் தேதி பா.ம.க எம்.எல்.ஏவும், ராமதாஸின் தீவிர ஆதரவாளருமான அருள் சென்ற காரை நடுவழியில் மறித்து சிலர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பா.ம.க எம்.எல்.ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் பெத்தநாயக்கம் பாளையத்திற்கு சென்று வாழப்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது அன்புமணி ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்ட கும்பல், அருளின் காரை மறித்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 6 கார்கள் சேதமடைந்து, கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பரபரப்பான இந்த சூழலில், பலரும் அங்கு சரமாரியாக தாக்கப்பட்டனர். அந்த நேரத்தில், அங்கிருந்த போலீசார் உதவியுடன் எம்எல்ஏ அருள் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனிடையே, அருள் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆதரவாளர்கள் மீது அன்புமணி தரப்பினர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அருள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்புமணி ஆதரவாளர்கள் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இதே போன்று அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி தரப்பினர், சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, எம்.எல்.ஏ அருள் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், வன்முறையை தூண்டி வரும் எம்.எல்.ஏ அருள் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணியின் ஆதரவாளரும், பா.ம.க வழக்கறிஞருமான பாலு சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் கொடுத்ததை தொடர்ந்து பா.ம.க எம்.எல்.ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ராமதாஸின் உழைப்பை அன்புமணி திருடுகிறார். மாம்பழம் சின்னம் தனக்கு தான் அன்புமணி கொக்கரிக்கிறாரே, அதுவெல்லாம் பொய்யான கொக்கரிப்பு. ஜி.கே மணி தலைவராக இருந்தபோது ஏ பார்ஃம், பி பார்ஃமில் கையெழுத்து போட்டார். இப்போது பா.ம.கவின் தலைவர் ராமதாஸ் தான். அவர் தான் ஏ பார்ஃம், பி பார்ஃமில் கையெழுத்து போடுவார்” என்று கூறினார்.
Follow Us