பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் போலி ஆவணங்களை அளித்து பாமக கட்சியை அபகரித்ததாக அன்புமணி ராமதாஸுக்கு எதிராக, ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மினி புஷ்கர்ணா அமர்வில் இன்று (04.12.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில் வாதிடுகையில், “பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வதற்கான அனுமதியை வழங்கக் கூடாது. ராமதாஸ் தான் பாமகவின் தலைவராக இருக்க வேண்டும். கடந்த மே மாதம் முதல் ராமதாஸ் தலைவராகத் தொடர்ந்து வருகிறார்” என வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மினி புஷ்பர்னா, “பாமக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தமிழ்நாட்டில் தேர்தல் வந்தால் வேட்பாளர்களை அங்கீகரித்து யார் கையெழுத்திடுவதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குத் தேர்தல் ஆணையத்தின் தரப்பில், “தேர்தலுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு என்று பட்டியல் வெளியிடப்படும். இத்தகைய சூழலில் இருதரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் இருதரப்பு கையெழுத்துப் போடுவதையுமே ஏற்றுக்கொள்ளாது. அது மட்டுமல்லாமல் கட்சியினுடைய சின்னமும் முடக்கி வைக்கப்படும். தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரையில் ஆவணங்கள் அடிப்படையில் தான் பாமக விவகாரத்தில் முடிவெடுத்துள்ளோம். ராமதாஸ் தரப்பானது கட்சிக்கு உரிமை கோரும் நிலையில் குறைந்தபட்சம் அவர்கள் தரப்பு ஆவணங்களைத் தேர்தல் ஆணியத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று ராமதாஸ் தரப்பு இந்த விவகாரத்தை அணுக வேண்டும். அது மட்டுமல்லாமல் கட்சியின் தலைவர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுப்பதில்லை. தற்போதைய ஆவணங்கள் அடிப்படையில் தான் அன்புமணி ராமதாசை தலைவராக அங்கீகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளோம். அது உறுதி இல்லை என்றால் அவர் தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான உரிய ஆவணங்களை ஆதாரங்களை எதிர்ப்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
Follow Us