தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதே சமயம், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. 

Advertisment

இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கட்சியில் அதிகாரத்தை யார் கட்டுப்படுத்துவது, பாமகவின் தலைவர் யார் என்கிற மோதலானது வெளிப்படையாக இருந்து வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி கடந்த 7ஆம் தேதி (07.01.2026) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுக - பாமக இடையிலான  கூட்டணி உறுதி செய்யப்பட்டது. 

Advertisment

அதே சமயம் பாமகவின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையானது சட்ட விரோதம் எனவும், நீதிமன்ற அவமதிப்பு எனவும் ராமதாஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பல மோசடிகளில் ஈடுபட்டு தன்னை தலைவர் என அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவின் பெயரைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் அன்புமணி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் அன்புமணியால் தான் பாமக தோல்வியைச் சந்தித்தது. 

ramadoss-mic1

இதன் காரணமாகக் கடந்த பொதுக்குழுவில் பாமக நிறுவனரான நான் (ராமதாஸ்) தலைவராகத் தொடர்ந்து செயல்படும் வகையில் கட்சி பொதுக்குழுவானது உறுதி எடுத்து, இது தொடர்பாக முடிவெடுத்தது. எனவே பாமகவின் பெயரைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ், பாமக கட்சிக்கு நான் தான் தலைவர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தற்போது வரையில் தேர்தல் ஆணையம் எவ்வித அதிகாரப்பூர்வமான பதில்களையும் அளிக்காத நிலையில் மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment