தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால்,சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

Advertisment

இந்நிலையில் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக உள்ள பைஜன் பாண்டா, பனையூரில் உள்ள அன்புமணி இல்லத்திற்கு நேரடியாகச் சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சியை இடம் பெறச் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சியும் இணையும் என அன்புமணி இசைவு தெரிவித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனவே அன்புமணி தரப்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது. மற்றொருபுறம் பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

Advertisment