சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்வதா?. திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊதிய முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமை கோரி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisment

2009 மே மாதம் 31ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது.

Advertisment

அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்று வரை  விடியல் கிடைக்கவில்லை.

tn-sec-mks

இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினே, ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது நியாயமற்றது.

Advertisment

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. 

arivalayam-mks

அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் கூட இன்று வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை; ஊதிய முரண்பாடும் களையப்படவில்லை. மாறாக, அவர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றுவதன் மூலம் திமுக அரசின் துரோகப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே, ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தை திமுக அரசு கைவிட வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கை உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.