பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (09.08.2025) நடைபெற்றது. அதில், “பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மேலும் ஓராண்டுக்குத் தொடர்வார். அதன்படி அடுத்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் வரை பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது. அதே போன்று கட்சியின் பொதுச் செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் ஓர் ஆண்டுக்கு அப்பதவியில் தொடர்வார்கள். திமுக ஆட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் இதுவரை 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. எனவே திமுக அரசைச் சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த உறுதியேற்போம்” எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இன்னும் ஓராண்டுக் காலம் எங்களை இந்த பொறுப்பிலே தொடர வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றிய உங்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் பொறுப்புகளுக்கும் பதவிகளுக்கும் நான் இருப்பவன் அல்ல. என் மீது பாசத்திலும் அன்பை வைத்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதைவிட என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை நிச்சயமாக வீண் போகாது. உங்களைப் பொறுப்புடன் கடமையுடன் நான் வழிநடத்துவேன். நம்முடைய இனமான காவலர் சமூக நீதி போராளி மருத்துவர் ஐயா ராமதாஸ் தான் நம்முடைய வழிகாட்டி. அவர்தான் எல்லாம். நம் இயக்கம் நம் கட்சி இந்த சமுதாயம் அவருடைய கொள்கைகளை நாம் பின்பற்றுகின்றோம். 

ராமதாஸின் பல லட்சியங்கள் பல கனவுகள் அதை நாம்  எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். அதில் மிக முக்கியமானது வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும். தமிழ்நாட்டிலே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அந்த அடிப்படையிலே அனைத்து நிலை சமுதாயங்களுக்கும் குறிப்பாகப் பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களுக்கு சமூக நீதி பெற வேண்டும். இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நோக்கம் ராமதாஸின் லட்சிய கனவுகள். அதுபோன்ற கனவுகளை எல்லாம் நாம் இணைந்து நிறைவேற்றுவோம். இந்த பொதுக்குழுவிலே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமான தீர்மானம் அரசியல் தீர்மானம். இந்த அரசியல் தீர்மானத்தில் முக்கிய முடிவை நாம் எடுத்திருக்கின்றோம். அதில் ஒன்றைத் தெளிவாக இந்த தீர்மானத்தை இந்த பொதுக்குழு வாயிலாக நாம் சொல்லி இருக்கின்றோம்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற திமுக அரசை வெளியேற்றுவோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று அரசியல் தீர்மானத்தை ஒருமனதாக நாம் நிறைவேற்றி இருக்கின்றோம். நமக்கு இரண்டு இலக்குகள் இருக்கிறது. ஒன்று யார் ஆட்சிக்கு வர வேண்டும். அடுத்தது யார் வரக்கூடாது. இப்போது நம்முடைய ஒரு இலக்கு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தெளிவுபடுத்திவிட்டோம். முடிவாக இருக்கின்றோம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். அதைத்தான் நான் இந்த நடைப்பயணத்திலே தெருத் தெருவாக வீதி வீதியாகச் சென்று சொல்லி வருகின்றேன். இவர்கள் வரக்கூடாது திமுக வரக்கூடாது திமுக மீண்டும் வரக்கூடாது. இதில் தெளிவாக இருக்கின்றோம். 

Advertisment

pmk-meet-our

அடுத்தது யார் வர வேண்டும் அது முக்கியமானது. இதை இன்னும் ஒரு சிறு காலத்திலே நாம் முடிவு செய்வோம். நல்ல ஒரு கூட்டணியை அமைப்போம். மெகா கூட்டணியை அமைப்போம். நாம் ஆட்சிக்கு வருவோம். அது இன்னும் ஒரு சிறு காலத்திலே நடைபெறும். உங்கள் மனதிலே என்ன தோன்றுகிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய விருப்பப்படிதான் அந்த கூட்டணியை நாம் அமைப்போம். ஒரு எனக்கு முன்பு பேசியவர்கள் ஒரு சிலர் சொன்னார்கள் தமிழ்நாட்டிலே நம்முடைய வாக்கு விகிதம் ஆறு விழுக்காடு ஏழு விழுக்காடு. ஆனால் அந்த நேரத்திலே நாம் கூட்டணிக்குச் சென்று ஒரு காரணத்தால் தான் அவ்வளவுதான் நாம் பெற முடிகிறது. பெற முடிந்தது” எனப் பேசினார்.