பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று பாமகவின் தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்தில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடியது. அதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அன்புமணி இதுவரை விளக்கமளிக்காததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகிகள் கூட்டம் இன்று (03.09.2025) நடைபெற்றது. 

Advertisment

22 பேர் கொண்ட பாமக நிர்வாகக் குழுவில் ராமதாஸின் மகள் காந்திமதியும் இடம்பெற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில், அன்புமணி 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்காதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “அன்புமணிக்கு ஆகஸ்டு 31 வரை விளக்கமளிக்கக் கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. தற்போது அவருக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்படுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். இதையடுத்து, “அன்புமணி மீண்டும் பதிலளிக்கவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு, “போகப் போகத் தெரியும்,” என்று தனது வழக்கமான பாணியில் பதிலளித்து முடித்துக் கொண்டார். இந்நிலையில் தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அன்புமணி இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார். அப்போது சேலம் விமான நிலையத்தில் அவருக்கு இரு மாவட்ட கட்சி நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்கள், “உங்கள் மீது உள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ், 2வது முறையாகக் கெடு விதித்திருப்பது ...” குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நாளை (04.09.2025) பதில் அளிக்கிறேன்” எனத் தெரிவித்துவிட்டு கட்சி நிர்வாகிகளுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.