அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.க. தலைவர்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அய்யா வழி என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கிய சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் அவரை  முடிவெட்டும் கடவுள் என குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டிய அலட்சியத்தை  ஏற்றுக்கொள்ள முடியாது.

Advertisment

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட  கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான முதல் விருப்ப வாய்ப்பாக ‘முடிசூடும் பெருமாள் மற்றும் முத்துக்குடி என்று அழைக்கப்பட்டார்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பில் முடிசூடும் பெருமாள் என்பதை  "Vishnu with a crown" என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக ‘the god of hair cutting'  என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர். இது அய்யா வழியை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  ஒரு சாதாரண சொல்லைக் கூட சரியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாத நிலையில் இயங்கி வருவது வருத்தமளிக்கிறது. சுவாமி அய்யா வைகுண்டரை  ‘the god of hair cutting'  என்று குறிப்பிட்டதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அந்த  வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.