நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று (28-07-25) நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் உள்ளிடோர் பேசினர். அதே சமயம், மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் இன்று முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று (29-07-25) மக்களவையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், “ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் கொடூரமான சம்பவம் நடந்தது. பயங்கரவாதிகள், அப்பாவி மக்களை அவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு சுட்டுக் கொன்றது, கொடுமையின் உச்சம். இது இந்தியாவை வன்முறையின் நெருப்பில் தள்ள நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி. இது இந்தியாவில் கலவரங்களை பரப்புவதற்கான ஒரு சதி. நாடு ஒற்றுமையுடன் அந்த சதியை முறியடித்ததற்காக இன்று நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த அவையின் முன் இந்தியாவின் தரப்பை முன்வைக்க நான் இங்கே நிற்கிறேன். இந்தியாவின் பக்கத்தைப் பார்க்காதவர்களுக்கு, நான் இங்கே ஒரு கண்ணாடியைக் காட்ட நிற்கிறேன். ஏப்ரல் 22ஆம் தேதியன்று நான் வெளிநாட்டில் இருந்தேன். சம்பவம் நடந்த பிறகு உடனடியாக நாடு திரும்பினேன். திரும்பி வந்த உடனடியாக, நான் ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். பயங்கரவாதத்திற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்றும், இது நமது தேசிய உறுதிப்பாடு என்றும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினோம். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. எப்போது, எங்கே, எப்படி, எந்த முறையில் என்பதை ராணுவம் முடிவு செய்யலாம் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. அந்த கூட்டத்தில் அனைத்தும் தெளிவாகக் கூறப்பட்டன.
பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். பயங்கரவாத மூளையாக செயல்பட்டவர்கள் இன்றுவரை தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கும் அளவுக்கு அது ஒரு தண்டனையாக இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கும் என்று எண்ணம் பாகிஸ்தான் படைகளுக்கு இருந்தது. அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தல்களை விடுக்கத் தொடங்கினர். மே 6- 7 இடைப்பட்ட இரவில் இந்தியா முடிவு செய்தபடியே நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. நமது படைகள் ஏப்ரல் 22ஆம் தேதிக்கு பழிவாங்கும் நடவடிக்கைக்காக 22 நிமிடங்களுக்குள் துல்லியமாக தாக்குதல் நடத்தின. அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. இந்த அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா தலைவணங்காது. பாகிஸ்தானின் விமான தளங்களும் சொத்துக்களும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இன்றுவரை, அவர்களின் பல விமான தளங்கள் ஐ.சி.யூயில் உள்ளன. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. யாரும் அங்கு செல்ல முடியும் என்று யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாது. பஹாவல்பூர், முரிட்கேவும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. எங்கள் படைகள், பயங்கரவாத தளங்களை அழித்துவிட்டன. இது தொழில்நுட்ப அடிப்படையிலான போரின் சகாப்தம். கடந்த 10 ஆண்டுகளில் நாம் செய்த தயாரிப்புகளை நாம் செய்யாவிட்டால், இந்த தொழில்நுட்ப சகாப்தத்தில் நாம் எவ்வளவு இழப்பை சந்தித்திருப்போம் என்பதை நாம் கற்பனை செய்து பாருங்கள். ஆபரேஷன் சிந்தூர் மூலம், முதன்முறையாக உலகம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் சக்தியை அங்கீகரித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை அம்பலப்படுத்தின.
இந்தியா 3 புள்ளிகளில் முடிவு செய்துள்ளது என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுப்படுத்துகிறது. 1, இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நாம் நமது சொந்த முறையில், நமது நிலைமைகள் மற்றும் நமது நேரத்திற்கு ஏற்ப பதிலடி கொடுப்போம். 2, இப்போது எந்த அணுசக்தி மிரட்டலும் வேலை செய்யாது. 3, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கங்களையும், பயங்கரவாத மூளைகளையும் இரண்டு தனித்தனி நிறுவனங்களாக நாங்கள் பார்க்க மாட்டோம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து இங்கு நிறைய பேசப்பட்டது. உலகளாவிய ஆதரவு குறித்தும் விவாதங்கள் நடந்தன. எங்களுக்கு உலகளாவிய ஆதரவு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, என் நாட்டின் துணிச்சலான வீரர்களின் வீரத்திற்கு காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை. ஏப்ரல் 22 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 3, 4 நாட்களாக காங்கிரஸ் துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். 56 அங்குல மார்பு எங்கே போனது? மோடி எங்கே போனார்? மோடி தோல்வியடைந்துவிட்டார் என்று சொல்லத் தொடங்கினர். பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதில் கூட அவர்கள் தங்கள் அரசியலை வடிவமைத்துக் கொண்டிருந்தனர். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் துரதிர்ஷ்டவசமாக கற்பனை செய்யத் துணிந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" எனப் பேசினார்.