அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான இன்று (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். 

இதனையொட்டி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாகப் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அங்கிருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். அதாவது சோழகங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரியில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கோயில் வரை ரோடு ஷோ நடைபெற்றது. சுமார் 4 கி.மீ. தொலைவிற்கு நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி காரில் நின்றபடியே பயணித்தார். 

இந்த ரோடு ஷோவின் போது சாலையின் இருபுறமும் இருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் வழிநெடுகிலும் அவருக்கு மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இவ்வாறு சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். அதனைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இதனையடுத்து வாரணாசி கங்கை நீரைக் கொண்டு சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். 

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர்  மற்றும் சிதம்பரம் மங்களை தொகுதி  எம்.பி., திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார். அப்போது ‘ஓம் சிவோஹம்’ என்ற பாடலைக் கேட்டு இளையராஜாவைப்  பிரதமர் மோடி பாராட்டினார். அதோடு இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சியை மனமுருகி  பிரதமர் மோடி ரசித்தார். அதோடு 4ஆம் திருமுறை மற்றும் ஓதுவார்கள் பாடிய திருப்புகழ் பாடலை கேட்டு பிரதமர் மோடி ரசித்தார்.