கோப்புப்படம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது.
அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இனைந்தது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் வரும் மார்ச் மாதம் 01ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி இரவு சென்னை வருகை தர உள்ளார். அன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். அதற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 1ஆம் தேதி (01.03.2026 - ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்திற்குப் பின்னர் அங்கிருந்து கிளம்பி மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்திற்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதன்படி இங்குத் தரிசனம் செய்துவிட்டு மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
மேலும் மார்ச் 7ஆம் தேதி வேலூரிலும், மார்ச் 11ஆம் தேதி திருச்சி, தஞ்சை என மூன்று இடங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us