ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த ஜூலை 30ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து பால், நெய், கோதுமை, சோயாபீன்ஸ், ஆப்பிள், திராட்சை, சோளம் உள்ளிட்ட வகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய அந்த நாடு அனுமதி கோரியதாகவும், இவை அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தாணியங்கள் அதனால் இந்தியாவின் விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்றும் இந்தியா கூறி அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா பொருட்களுக்கு 25% வரி விதிப்பு அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தியப் பொருட்கள் மீதான டிரம்பின் 25% வரிகளில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு கூடுதல் வரியாக 25 சதவீதத்தை உயர்த்தி மொத்தமாக 50% வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த 6ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரதமர் மோடி சீனா செல்ல உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் 25% வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வர உள்ளன. இதனிடையே, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்தியா பொருளாதாரம் இறந்து போய்விட்டதாகவும், உலகிலேயே அதிக வரியை இந்தியா விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து பேசினார். இந்தியா குறித்து டிரம்ப் விமர்சித்தது குறித்து பிரதமர் மோடி உட்பட எந்த ஒன்றிய அமைச்சரும் பதிலளிக்காமல் மறுத்து வந்தனர். இருப்பினும், இந்தியாவுக்கு இரண்டாம் கட்ட தடைகளை விதிகளை விதிக்க போவதாக டிரம்ப் அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகிறார். இதனால், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான மோதல் அதிகரித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் உலகத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப்பைத் தவிர, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பான பிரச்சனை அதிகரிக்கும் நிலையில், இந்தப் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.