ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த ஜூலை 30ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே, இந்தியாவை டிரம்ப்ன் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். இந்தியா பொருளாதாரம் இறந்து போய்விட்டதாகவும், உலகிலேயே அதிக வரியை இந்தியா விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியா குறித்து டிரம்ப் விமர்சித்தது குறித்து பிரதமர் மோடி உட்பட எந்த ஒன்றிய அமைச்சரும் பதிலளிக்காமல் மறுத்து வந்தனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், கூடுதல் வரியாக 25 சதவீதத்தை உயர்த்தி இந்தியாவுக்கு மொத்தமாக 50% வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரதமர் மோடி சீனா செல்ல உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் 25% வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.

வரி விதிப்பு மூலம் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை டிரம்ப் கடந்த 15ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணெய் விவகாரம், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் குறித்து பேசியதாகக் கூறப்பட்டது. இதில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை எனத் தகவல் வெளியானது. எனவே அமெரிக்கா - ரஷ்யா இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டிரம்புடனான சந்திப்பு குறித்து தன்னிடம் பகிர்ந்து கொண்டதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘எனது நண்பர் அதிபர் விளாடிமிர் புடினின் தொலைபேசி அழைப்புக்கும், அலாஸ்காவில் அதிபர் டிரம்புடனான தனது சமீபத்திய சந்தித்து குறித்து தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. மேலும், இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது. வரும் நாட்களில் நமது தொடர்ச்சியான பரிமாற்றங்களுக்காக நான் காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.