சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் போன்றவர்கள் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலோ அல்லது காவலில் இருந்தாலோ அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். 

Advertisment

அவர் தாக்கல் செய்த மசோதாவில், 5 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை விதிக்கும் வகையிலான எந்த ஒரு குற்றச்சாட்டின் கீழும் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால் 31வது நாளில் அவர்கள் தனது ராஜினாமாவை சமர்பிக்க வேண்டும். ஒருவேளை ராஜினாமாவை சமர்பிக்கவில்லை என்றால் அவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் எனவும் இந்த புதிய மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள், அமைச்சர்கள் மீது பொய் புகாரைப் பதிவு செய்து சிறையில் அடைக்க ஒன்றிய பா.ஜ.க அரசு முயல்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பதவி நீக்க மசோதா குறித்து முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி மெளனம் கலைத்துள்ளார். பீகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசியதாவது, “ஒரு அரசு ஊழியர் 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், அவர் ஓட்டுநர், எழுத்தர் அல்லது பியூன் என எந்த வேலையாக இருந்தாலும் தானாகவே வேலையை இழப்பார். ஆனால் ஒரு முதலமைச்சர், அமைச்சர் அல்லது பிரதமர் சிறையில் இருக்கும்போது கூட அரசாங்கத்தில் இருக்க வேண்டுமா?. அரசாங்கங்கள் ஏன் சிறையில் இருந்து இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்? கறைபடிந்த அமைச்சர்கள் தங்கள் பதவிகளைத் தொடர வேண்டுமா? மக்கள் தங்கள் தலைவர்கள் தார்மீக நேர்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Advertisment

சில காலத்திற்கு முன்பு, சிறையில் இருந்து கோப்புகள் எவ்வாறு கையெழுத்திடப்படுகின்றன என்பதையும், சிறையில் இருந்து அரசாங்க உத்தரவுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையும் நாங்கள் பார்த்தோம். தலைவர்களுக்கு அத்தகைய அணுகுமுறை இருந்தால், ஊழலை எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும்? காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் மசோதாக்களை எதிர்க்கின்றன. அவர்கள் எதற்கு பயப்படுகிறார்கள்? ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பது பீகாரில் உள்ள அனைவருக்கும் தெரியும்” என்று கிண்டலாகப் பேசினார்.