கானா, அர்ஜெண்டினா, பிரேசில், நம்பீயா மற்றும் டிரினிடாட் & டொபாகோ ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி ஆப்பிரிக்கா நாடான கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து, நேற்று (06-07-25) பிரேசிலுக்குச் சென்று அங்கு நடந்த 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
அந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “மனிதக்குலம் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களில் பயங்கரவாதமும் ஒன்று. சமீபத்தில், பஹல்காமில் இந்தியா மனிதாபிமானமற்ற மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது. இது அனைத்தும் மனிதகுலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இரட்டை நிலைக்கு எந்தவித இடமும் இல்லை. எந்தவொரு நாடும் பயங்கரவாதத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்தால், அதற்குண்டான விலையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராக தடை விதிப்பதில் எந்தவித தயக்கமும் காட்டக் கூடாது. பயங்கராவாதத்தை ஆதரவளிப்பவர்களையும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது.
தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் பயங்கராவாத்திற்கு மெளனமான ஒப்புதலையும், ஆதரவையும் பொறுத்துக்கொள்ளக் கூடாது. இதில் அனைத்து நாடுகளும் தீர்க்கமாக இருக்க வேண்டும். மகாத்மா காந்தி மற்றும் கெளதம புத்தர் ஆகியோரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு இந்தியா அமைதி பாதையை தொடர்ந்து பின்பற்றும். எவ்வளவு கடினமாக சூழ்நிலைகள் இருந்தால், மனிதகுலத்தின் நலனுக்கான சிறந்த பாதை அமைதி மட்டுமே. 21 ஆம் நூற்றாண்டில், மனிதகுலத்தின் செழிப்பும் முன்னேற்றமும் தொழில்நுட்பத்தை குறிப்பாக செயற்கை நுண்ணறிவைச் சார்ந்துள்ளது. ஒருபுறம், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு ஏஐ மிகவும் பயனுள்ள வழிமுறையாக இருக்கிறது. மறுபுறம், அபாயங்கள், நெறிமுறைகள், சார்பு போன்ற கேள்விகளும் ஏஐ உடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் சிந்தனை மற்றும் கொள்கை தெளிவாக உள்ளது. மனித மதிப்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக ஏஐ-யை நாங்கள் பார்க்கிறோம். அனைவருக்கும் ஏஐ என்ற மந்திரத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம். இன்று, இந்தியா விவசாயம், சுகாதாரம், கல்வி, நிர்வாகம் போன்ற துறைகளில் ஏஐ-யை தீவிரமாகவும் விரிவாகவும் பயன்படுத்துகிறது” என்று கூறினார்.
முன்னதாக பஹல்காம் தாக்குதலை கண்டித்து பிரிக்ஸ் நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. அதில், ‘ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று நடந்த தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். அனைத்து பயங்கரவாத செயல்களையும் நியாயப்படுத்த முடியாது. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நிலைப்பாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது’ எனத் தெரிவித்தது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இறுதியாக நம்பீயா நாட்டுக்குச் செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.