சீனாவின் தியான்ஜினியில் நடைபெறும் 25வது ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி சீனா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில், சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையிலேயே பிரதமர் மோடி சாடி பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாகும். கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியா பயங்கரவாதத்தின் சுமைகளைத் தாங்கி வருகிறது. சமீபத்தில், பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இந்த துயர நேரத்தில் எங்களுடன் நின்ற நட்பு நாட்டிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும். இந்த பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் ஒரு வெளிப்படையான சவாலாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது. பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும், எந்த நிறத்திலும் நாம் ஒருமனதாக எதிர்க்க வேண்டும். இது மனிதகுலத்திற்கு நாம் செலுத்தும் கடமை.
கூட்டு தகவல் நடவடிக்கையை வழிநடத்துவதன் மூலம் அல்-கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக போராட இந்தியா முன்முயற்சி எடுத்தது. பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக நாங்கள் எங்கள் குரலை எழுப்பினோம். அதில் நீங்கள் அளித்த ஆதரவிற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உறுப்பினராக இந்தியா மிகவும் நேர்மறையான பங்கை வகித்துள்ளது” என்று கூறினார்.
கடந்த 2001ஆம் ஆண்டில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் முயற்சியால் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ (எஸ்சிஓ) என்ற கூட்டமைப்பு உருவானது. இந்த கூட்டமைப்பில் கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்தன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கும் விவகாரம், பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவற்றின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.