டெல்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட பல மாடிகொண்ட 184 குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (11.08.2025) திறந்து வைத்தார். முன்னதாக இந்த குடியிருப்புகளைக் கட்டிய தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதோடு குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “இன்று நாடாளுமன்றத்தில் எனது சகாக்களுக்கான (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இதில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் 4 பெரிய ஆறுகளான கிருஷ்ணா, கோதாவரி, கோசி மற்றும் ஹூக்ளி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோசி என்பது அடுக்குமாடி குடியிருப்பின் பெயராக இருந்தால் சிலர் சங்கடப்படுவார்கள். இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய குடியிருப்புகளில் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
மேலும் அவர்கள் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். இந்த பல மாடி கட்டிடங்களில், 180க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஒன்றாக வசிப்பார்கள். நான் முன்பு கூறியது போல், வாடகை கட்டிடங்களில் இயங்கும் அமைச்சகங்களின் வாடகை அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.1500 கோடி செலவாகும். அதேபோல், போதுமான எண்ணிக்கையிலான எம்.பி. குடியிருப்புகள் இல்லாத நிலையில் அரசாங்க செலவுகள் மிக அதிகமாக இருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், 2014 முதல் 2024 வரை புதிய குடியிருப்பு எதுவும் கட்டப்படவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் 2014 முதல் சுமார் 350 எம்.பி. குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன” எனப் பேசினார்.