அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான இன்று (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காகத் தமிழக அரசு மற்றும் பா.ஜ.க. சார்பில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று (26.07.2025) தமிழகம் வருகை தருகை தந்து உள்ளார். அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நன்பகல் 12 மணிக்குக் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு செய்கிறார். இந்தியத் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட உள்ளார். அதே சமயம் பிரதமர் மோடி முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், ஜூலை 27 அன்று வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.