மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க் அருகே 9வது சர்வதேச சாந்தலி மாநாடு நேற்று  (07.03.2026) நடைபெற்றது. இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக முதலில் சிலிகுரி அருகே உள்ள பிதான்நகர் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, கடைசி நேரத்தில் மாநில நிர்வாகத்தால் சிறிய இடமான கோசைன்பூருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிதான்நகர் மைதானத்தில் நடைபெறவிருந்த  மாநாட்டு மைதானத்தை பார்வையிட்டார். 

Advertisment

அதன் பிறகு அவர் பேசுகையில், “சர்வதேச சந்தால் மாநாடு இன்று (அதாவது நேற்று) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இங்கு வந்தபோது, இந்த இடம் மிகவும் பரந்த அளவில் இருப்பதால் இங்கேயே மாநாட்டை நடத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. நிர்வாகத்தின் மனதில் என்ன ஓடியது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த இடம் நெருக்கடியாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் இங்கு ஐந்து லட்சம் மக்கள் எளிதாகக் கூட முடியும் என்று நான் நினைக்கிறேன். எதற்காக எங்களை அங்கு அழைத்துச் சென்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

Advertisment

சந்தால் மக்கள் செல்ல முடியாத ஓரிடத்தை மாநாட்டிற்காக நிர்வாகம் ஏன் தேர்ந்தெடுத்தது என்று எனக்குத் புரியவில்லை. இந்த மாநாடு மிகத் தொலைவில் நடைபெற்றதால், இங்குள்ள மக்களால் அங்கு வர முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஒருவேளை யாராலும் கலந்து கொள்ள முடியாது, குடியரசுத் தலைவர் அப்படியே திரும்பிச் சென்றுவிடுவார் என்று நிர்வாகம் எதிர்பார்த்திருக்கலாம். குடியரசுத் தலைவர் ஓரிடத்திற்கு வருகை தரும்போது, முதலமைச்சரும் அமைச்சர்களும் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வரவில்லை. நானும் வங்காளத்தின் மகள் தான். மம்தா தீதி எனது சகோதரி. எனது தங்கை போன்றவர். அவர் என் மீது கோபமாக இருந்தாரா?. என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் தான் இப்படி நடந்ததோ என்னவோ?” எனக் கேள்வி எழுப்பினார். 

murmu mic-mamta

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது மிகவும் வெட்கக்கேடான மற்றும் முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாகும். ஜனநாயகம் மற்றும் பழங்குடியின சமூகங்களின் மேம்பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் இதனால் மனச்சோர்வடைந்துள்ளனர். ஒரு பழங்குடியின சமூகத்திலிருந்து வந்த குடியரசுத் தலைவர் வெளிப்படுத்திய வலியும் வேதனையும், இந்திய மக்களின் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு உண்மையில் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது. குடியரசுத் தலைவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்திற்கு அந்த மாநில நிர்வாகமே பொறுப்பாகும். சந்தால் கலாச்சாரம் போன்ற ஒரு முக்கியமான விஷயம், மேற்கு வங்க அரசால் இவ்வளவு அலட்சியமாக கையாளப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பதவியின் புனிதத்தன்மை எப்போதும் போற்றி மதிக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இனியாவது நற்புத்தி விளையும் என்று நம்புகிறோம்” எனக்  காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.