இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (07.08.2025) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், “சில ஆளுமைகள், அவர்களின் பங்களிப்புகள் ஒரு சகாப்தத்திற்கோ அல்லது ஒரு பிராந்தியத்திற்கோ மட்டும் பயன்படுவகை இல்லை. அனைத்து துறைக்குமானது ஆகும். பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் அத்தகைய ஒரு சிறந்த விஞ்ஞானி ஆவார். இந்தியத் தாயின் உண்மையான மகன். அவர் அறிவியலை பொது சேவைக்கான ஒரு ஊடகமாக மாற்றினார். நாட்டின் உணவுப் பாதுகாப்பை அவர் தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டார். 

இந்தியாவின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளை பல நூற்றாண்டுகளுக்கு வழிநடத்தும் ஒரு நனவை அவர் எழுப்பினார். இன்று தேசிய கைத்தறி தினம் (ஆகஸ்ட் 07) ஆகும். கடந்த 10 ஆண்டுகளில், கைத்தறித் துறை நாடு முழுவதும் புதிய அங்கீகாரத்தையும் வலிமையையும் பெற்றுள்ளது. சுவாமிநாதனுடனான எனது தொடர்பு பல வருடங்கள் பழமையானது. குஜராத்தின் முந்தைய நிலைமைகளைப் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். முன்னதாக, வறட்சி மற்றும் புயல்கள் காரணமாக, விவசாயம் கணிசமான நெருக்கடிகளைச் சந்தித்தது. மேலும் கட்ச் பகுதியில் பாலைவனம் விரிவடைந்து கொண்டிருந்தது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, மண் வள அட்டைக்கான பணிகளைத் தொடங்கினோம். சுவாமிநாதன் அதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். 

அவர் எங்களுக்கு வெளிப்படையாக ஆலோசனைகளை வழங்கினார். எங்களுக்கு வழிகாட்டினார். அவரது பங்களிப்பால், இந்த முயற்சி மகத்தான வெற்றியைப் பெற்றது. எம்.எஸ். சுவாமிநாதனை சந்தித்தது ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக அமைந்தது. ‘அறிவியல் வெறும் கண்டுபிடிப்பு மட்டுமல்ல, அதை பொதுமக்களுக்கு வழங்குவதும் ஆகும்’ என்று அவர் கூறியிருந்தார். இதை அவர் தனது படைப்புகள் மூலம் நிரூபித்தார். இன்றும் கூட, அவரது கருத்துக்கள் இந்தியாவின் விவசாயத் துறையில் காணப்படுகின்றன. அவர் உண்மையிலேயே அன்னை பாரதியின் ரத்தினம். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கும் வாய்ப்பு எங்கள் (மத்திய) அரசுக்குக் கிடைத்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 

இன்று, பல்லுயிர் பெருக்கம் பற்றிய விவாதங்கள் உலகளவில் நடைபெற்று வருகின்றன. மேலும் அரசாங்கங்கள் அதைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால்  சுவாமிநாதன் ஒரு படி மேலே சென்று உயிரியல் மகிழ்ச்சி (bio - happiness) என்ற கருத்தை வழங்கினார். இன்று, நாம் இங்கே இந்த யோசனையைக் கொண்டாடுகிறோம். பல்லுயிர் பெருக்கத்தின் வலிமையால், உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று டாக்டர் சுவாமிநாதன் கூறுவார். ‘எங்களைப் பொறுத்தவரை, எங்கள் விவசாயிகளின் நலனே எங்கள் முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் அதற்காக நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், ஆனால் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். இன்று, இந்தியா நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளுக்கு உதவ தயாராக உள்ளது” எனப் பேசினார்.

Advertisment

முன்னதாக இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்தியப் பொருட்கள் மீது மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அறிவித்துள்ளது. ஏற்கனவே 25% வரி விதிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 25% வரியை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். இதன் மூலம் இந்தியப் பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.