Advertisment

“நான் தலைமைப் பதவியில் சேவையாற்றுவது அரசியலமைப்பு சாசனத்தால் தான்” - பிரதமர்!

modi-constitution

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று (26.11.2025) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.  அதில், “நவம்பர் 26, ஒவ்வொரு இந்தியருக்கும் மகத்தான பெருமிதத்தை அளிக்கும் நாளாகும். நாட்டின் முன்னேற்றத்தை தெளிவாகவும், உறுதியாகவும் தொடர்ந்து வழிநடத்தும் புனித ஆவணமான இந்திய அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபை கடந்த 1949ஆம் ஆண்டில் இதே நாளில்தான் ஏற்றுக்கொண்டது. அதனால்தான் நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாகக் கொண்டாட 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2015இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவு செய்தது.

Advertisment

மிகவும் எளிய, பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த என்னைப்போன்ற ஒரு நபர், சுமார் 24 ஆண்டுகள் அரசின் தலைமைப் பதவியில் சேவையாற்ற அரசியல் சாசனத்தின் வலிமைதான் வழிவகை செய்தது. 2014ஆம் ஆண்டு, முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு நான் வந்த போது, ஜனநாயகத்தின் தலைசிறந்த ஆலயத்தின் படிகளைத் தொட்டு வணங்கிய தருணத்தை இன்றும் நினைவில் கொண்டிருக்கிறேன். அதேபோல 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அரசியல் நிர்ணய சபையின் மைய அரங்கிற்கு சென்று அரசியல் சாசனத்தை எனது நெற்றியில் வைத்து வணங்கி, மரியாதை செலுத்தினேன். இந்த அரசியல் சாசனம், என்னைப் போன்று ஏராளமானவர்களுக்கு கனவு காண்பதற்கும், அதை நோக்கி பயணிப்பதற்குமான வலிமையையும் வழங்கியிருக்கிறது.

Advertisment

அரசியல் சாசன தினத்தன்று, அதன் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியல் நிர்ணய சபையின் எழுச்சியூட்டும் உறுப்பினர்களை நாம் நினைவு கூர்கிறோம். போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையுடன், அரசியல் சாசன வரைவுக் குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்ற டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் முயற்சிகளை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அரசியல் நிர்ணய சபையின் பல குறிப்பிடத்தக்க பெண் உறுப்பினர்கள், தங்களது ஆலோசனைகளாலும், தொலைநோக்குப் பார்வை கொண்ட கண்ணோட்டத்தின் வாயிலாகவும் இந்திய அரசியல் சாசனத்தை மேலும் மெருகூட்டினர்.

modi-constitution-1

என் நினைவுகள், 2010ஆம் ஆண்டிற்கு பின்னோக்கிச் செல்கின்றன. அந்த ஆண்டில்தான் இந்திய அரசியல் சாசனம் 60 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தது. எனினும் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்விற்கு கிடைத்திருக்க வேண்டிய தேசிய முக்கியத்துவம் வழங்கப்படாதது, வேதனை அளித்தது. இருந்த போதும், அரசியல் சாசனத்திற்கு ஒன்றுபட்ட நமது நன்றியையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதற்காக, குஜராத்தில் ‘அரசியல் சாசன கௌரவ அணிவகுப்பை’ நாங்கள் நடத்தினோம். நமது அரசியல் சாசனம் ஒரு யானையின் மீது வைக்கப்பட்டிருந்தது. பலதரப்பட்ட மக்களுடன் சேர்ந்து நானும் அந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.

அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75வது ஆண்டில் போது, இந்திய மக்களுக்கு இது ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல்லாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு ஏற்பாடு செய்து, தேசிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தொடங்கும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் சாதனை அளவிலான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டின் அரசியல் சாசன தினம், பல்வேறு காரணங்களுக்காக சிறப்பைப் பெறுகிறது.

central-vista-1

சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பகவான் பிர்சா முண்டா ஆகிய இரண்டு தலைசிறந்த ஆளுமைகளின் 150வது பிறந்தநாளை இது குறிக்கிறது. இருவருமே நமது தேசத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். தொலைநோக்குப் பார்வை கொண்ட சர்தார் படேலின் தலைமை, இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பை உறுதி செய்தது. அவரது எழுச்சியும் துணிச்சலும்தான் பிரிவு 370 மற்றும் 35 (ஏ)க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களுக்கு வழிகாட்டியது. ஜம்மு காஷ்மீரில் தற்போது இந்திய அரசியல் சட்டம் முழுதும் நடைமுறையில் உள்ளது. 

இதன் மூலம் பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்கள் உள்ளிட்ட மக்களின் அரசியல் சட்ட உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன. நமது பழங்குடி சமூக மக்களுக்கு நீதி, கண்ணியம் மற்றும் அதிகாரமளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு பகவான் பிர்சா முண்டாவின் வாழ்க்கை தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது. காலங்கள் கடந்தும் இந்தியர்களின் கூட்டு உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டையும் இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். அதே வேளையில் ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் 350வது தியாக தினத்தையும் நாம் அனுசரிக்கிறோம். அவரது வாழ்க்கையும், தியாகமும், நம்மை துணிச்சல், இரக்கம் மற்றும் வலிமையுடன் தொடர்ந்து வழிநடத்துகின்றன.

modi-gst-speech

இது போன்ற ஆளுமைகளின் பங்களிப்பு மற்றும் முக்கிய மைல்கல் தருணங்கள், நமது அடிப்படை கடமைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. பிரிவு 51 ஏ-ல் உள்ள அடிப்படைக் கடமைகள் என்ற பிரத்தியேக அத்தியாயத்தில் இந்திய அரசியல் சாசனமும் இதையே வலியுறுத்துகிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை எவ்வாறு அடைவது என்பதை இந்தக் கடமைகள் நமக்கு உணர்த்துகின்றன. குடிமக்களின் கடமைகளை மகாத்மா காந்தி எப்போதுமே வலியுறுத்தி வந்தார். ஒரு கடமையை சரியாகச் செய்யும்போது அதற்கு இணையான உரிமை உருவாவதுடன், கடமையை நிறைவேற்றுவதன் பலனாகக் கிடைப்பதுவே உண்மையான உரிமைகள், என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த நூற்றாண்டு தொடங்கி அதற்குள் 25 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நூற்றாண்டை இன்னும் இரண்டு தசாப்தங்களில் நாம் கொண்டாடுவோம். 2049ஆம் ஆண்டில், அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில் தற்போது நாம் கட்டமைக்கும் கொள்கைகள், நாம் எடுக்கும் முடிவுகள் மற்றும் நமது கூட்டு செயல்பாடுகள் முதலியவை, வருங்கால தலைமுறையின் வாழ்க்கையை வடிவமைக்கும். இதன்மூலம் எழுச்சி பெற்று, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் கனவை நோக்கி நாம் முன்னேறும் போது, நாட்டிற்கான நமது கடமைகளை ஆற்ற நாம் எப்போதும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

central-vista

நமது நாடு நமக்கு நிறைய செய்திருக்கிறது, அதனால் நம்மிடையே நாட்டிற்கான நன்றி உணர்வும் பெருகுகிறது. நாம் நமது கடமைகளை நிறைவேற்ற இயற்கையாகவே இந்த மனநிலை நம்முள் எழுகிறது. நமது கடமையை செய்வதற்கு முழு திறனையும் அர்ப்பணிப்பையும் ஒவ்வொரு பணியிலும் நாம் செலுத்துவது இன்றியமையாததாகிறது. நம் ஒவ்வொரு செயல்பாடும், அரசியல் சாசனத்தை வலுப்படுத்துவதுடன், தேசிய நலன்கள் மற்றும் இலக்குகளை மேம்படுத்த வேண்டும். நம் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின் கனவை நிறைவேற்றுவது நமது கடமை. அவ்வாறு கடமை உணர்வுடன் பணியாற்றும்போது, நம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும்.

வாக்களிக்கும் உரிமையை நமது அரசியல் சாசனம் நமக்கு வழங்கி இருக்கிறது. தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தவறாமல் வாக்களிப்பது நமது கடமை. பிறரையும் ஊக்குவிப்பதற்காக, 18 வயதைப் பூர்த்தி செய்யும் இளைஞர்களைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி நாம் சிந்திக்கலாம். இதன் மூலம், தாங்கள் மாணவர்கள் என்பதைக் கடந்து, தேச கட்டமைப்பிலும் ஆக்கப்பூர்வமான பங்கேற்பாளர்களாக திகழ்வதை முதல் முறை வாக்களிப்பவர்கள் உணர்வார்கள்.

modi-ariyalur-speech

நமது இளைஞர்களை பொறுப்பு மற்றும் பெருமித உணர்வுடன் நாம் எழுச்சியூட்டும் போது, அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஜனநாயக மாண்புகளுக்கு மதிப்பளிப்பார்கள். இத்தகைய உறுதிப்பாட்டுக்கான உணர்வு தான், ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம். அரசியல் சாசன தினத்தன்று, இந்த மாபெரும் தேசத்தின் குடிமக்களாக நமது கடமையை நிறைவேற்றும் உறுதிமொழியை நாம் மீண்டும் வலியுறுத்துவோம். இவ்வாறு செய்வதன் மூலம் வளர்ச்சியடைந்த மற்றும் அதிகாரம் பெற்ற நாட்டைக் கட்டமைப்பதில் நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

ambedkar indian constitution Narendra Modi prime minister
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe