மதுரையில் நேற்று (01.03.2026) நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் ரூ. 4 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டுயும் உரையாற்றினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.
இதனையடுத்து மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நேற்று (01.03.2026) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘வெற்றிவேல், வெற்றிவேல், வெற்றிவேல்...’ என்று தமிழில் கோஷமிட்டு தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது அவர், “ பூர்ணசந்திரனின் மறைந்த சம்பவம் எனக்கு பெரிய அளவுக்கு வலியை கொடுத்தது. திமுக அரசின் மனிதாபிமானமற்ற தன்மையின் காரணமாகத்தான் அவருடைய உயிரிழப்பு ஏற்பட்டது. முருக பக்தர்களுடைய எண்ணம் வெல்லும்” எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தடை விதிதிக்கப்பட்டதைக் கண்டித்து, நரிமேடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான பூர்ணச்சந்திரன் (வயது 40) என்பவர் டிசம்பர் மாசம் 18ஆம் தேதி தீக்குளித்து உயிரிழந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/02/poornchandran-modi-1-2026-03-02-08-09-03.jpg)
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த பூர்ணச்சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி இந்துமதி, இரு மகன்களை சந்திப்பதற்காக மாநாடு நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து மூவரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மேலும் இது தொடர்பாக மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரையில் இன்று (அதாவது நேற்று - 01.03.2026) பூர்ணச்சந்திரனை நான் நினைவு கூர்ந்தேன். இது மாநில திமுக அரசுக்குக் கூருணர்வு இல்லாததால் நடந்தது. அவர்கள் என்ன செய்தாலும் உண்மை வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள். அவரது மனைவி இந்துமதியையும், அவரின் மகன்களையும் நான் சந்தித்தேன்” எனத் தெரிவித்தார்.
Follow Us