பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி இன்று காலை 09.40 மணிக்கு புது டெல்லியில் இருந்து தனி விமானம் இந்த பயணத்தின் முதல் நாடான ஜோர்டான் நாட்டிற்கு  புறப்பட்டு சென்றார். இதனையடுத்து அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்து, இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  

Advertisment

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூவ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அம்மானில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக நன்மைக்காக இந்தியாவும் ஜோர்டானும் தொடர்ந்து நெருக்கமாகச் செயல்படும். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்தபோது எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். அதாவது ஜோர்டானுடனான உறவுகளை மேலும் ஆழப்படுத்த 8 அம்ச தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டேன். அதில் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, உரங்கள் மற்றும் விவசாயம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பு, உள்கட்டமைப்பு, முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்கள், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் அடங்கும்.

Advertisment

மேலும் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை நடத்தினேன். துடிப்பான இந்தியா - ஜோர்டான் உறவுகளில் அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, நமது இருதரப்பு ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். இந்த மைல்கல், வரும் காலங்களில் புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் முன்னேற நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (டிசம்பர் 16ஆம் தேதி) எத்தியோப்பியாவிற்கும்,  அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (டிசம்பர் 17ஆம் தேதி) ஓமன் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார்.