நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (21-07-25) டெல்லி உள்ள நாடாளுமன்றத்தில் தொடங்கியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் நடந்துள்ள நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “பருவமழை புதுமை மற்றும் புதிய படைப்பின் சின்னமாகும். இதுவரை கிடைத்த செய்திகளின்படி, நாட்டில் பருவம் மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. விவசாயத்திற்கு நன்மை பயக்கும் பருவம் பற்றிய தகவல்கள் உள்ளன. மேலும் விவசாயிகளின் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் இது மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கும் மழை மிகவும் முக்கியமானது.
நாடாளுமன்றத்தின் இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஒரு வெற்றி கொண்டாட்டம் போன்றது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். அனைத்து எம்.பி.க்களும் நாட்டு மக்களும் ஒரே குரலில் இந்த சாதனையைப் புகழ்வார்கள். இது நமது எதிர்காலப் பணிகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். இந்த மழைக்கால கூட்டத்தொடர் வெற்றியின் கொண்டாட்டம். இந்தியாவின் இராணுவ வலிமையை உலகம் முழுவதும் கண்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் இந்திய இராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100% அடையப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் எஜமானர்களின் வீடுகள் 22 நிமிடங்களுக்குள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ சக்திகளின் புதிய வடிவம் உலகம் முழுவதும் ஈர்க்கப்பட்டுள்ளது. உலக மக்களை நான் சந்திக்கும் போதெல்லாம், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மீதான ஈர்ப்பு உலக மக்களிடையே அதிகரித்து வருகிறது.
2014ஆம் ஆண்டு நீங்கள் அனைவரும் எங்களுக்குப் பொறுப்பை வழங்கியபோது பொருளாதாரத் துறையில், நம் நாடு மிகவும் பலவீனமாக ஐந்தாவது கட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, உலகப் பொருளாதாரத்தில் நாம் 10வது இடத்தில் இருந்தோம். இன்று உலகின், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இன்று, நமது பாதுகாப்புப் படைகள் புதிய தன்னம்பிக்கையுடன், நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதியுடனுன் முன்னேறி வருகின்றன. பல மாவட்டங்கள் இன்று நக்சலிசத்தில் இருந்து விடுபட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டம், நக்சலிசத்திற்கு எதிராக வெற்றி வருவதில் நாம் பெருமை கொள்கிறோம். 2014க்கு முன்பு நாட்டில் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்த ஒரு காலம் இருந்தது. இன்று, இந்த விகிதம் சுமார் இரண்டு சதவீதமாகக் குறைந்து வருகிறது. இதனால், நாட்டில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஒரு நிவாரணமாகவும் வசதியாகவும் மாறியுள்ளது. 25 கோடி ஏழை மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இது உலகின் பல அமைப்புகளால் பாராட்டப்படுகிறது” என்று கூறினார்.