இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 2 நாள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (23-07-25) டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இன்று லண்டன் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் பெருந்திரளாகக் கூடி அவரிடம் கைக்குலுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதன் பிறகு, அந்நாட்டு பிரதமர் கியார் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. 2020 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதிலிருந்து இங்கிலாந்து ஒரு நாட்டோடு கையெழுத்திட்ட மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும். இந்த ஒப்பந்தம், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்தின் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான வெளியுறவுத்துறை செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் இடையே கையெழுத்தானது. லண்டனில் பிரதமர் மோடி மற்றும் பிரிட்டிஷ் பிரதிநிதி கெய்ர் ஸ்டார்மர் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “இந்த ஒப்பந்தம் வெறும் பொருளாதார ஒப்பந்தம் மட்டுமல்ல, பகிரப்பட்ட செழிப்புக்கான திட்டமும் கூட. ஒருபுறம், இந்திய ஜவுளி, காலணிகள், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், கடல் உணவு மற்றும் பொறியியல் பொருட்கள் இங்கிலாந்தில் சிறந்த சந்தை அணுகலைப் பெறும். இந்தியாவின் விவசாய விளைபொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் தொழிலுக்கு இங்கிலாந்து சந்தையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த ஒப்பந்தம் குறிப்பாக இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் துறைக்கு பயனளிக்கும். மறுபுறம், இந்திய மக்களுக்கும் தொழில்துறையினருக்கும், மருத்துவ சாதனங்கள் போன்ற இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் நியாயமான மற்றும் மலிவு விலையில் கிடைக்கும்” என்று கூறினார்.
வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் கியார் ஸ்டார்மரும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளார்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது இங்கிலாந்து பிரதமர் கியார் ஸ்டார்மர் உரையின் போது பெண் மொழிபெயர்ப்பாளர் ஒருவர், இந்தியின் மொழி பெயர்ப்பதற்கு சிரமப்பட்டார். அப்போது பிரதமர் மோடி, “கவலைப்பட வேண்டாம். இடையில் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார். அதற்கு இங்கிலாந்து பிரதமர் கியார் ஸ்டார்மர், “நாம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்கிறோம் என்று நினைக்கிறேன்” என புன்னகைத்தப்படியே கூறினார்.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்வது 4வது முறையாகும். அதே சமயம் பிரிட்டன் பிரதமராக கியார் ஸ்டார்மர் பதவியேற்றபிறகு பிரதமர் மோடி பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்வது இது முதல் முறையாகும். பிரமதர் மோடி பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 25ஆம் தேதி மாலத்தீவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.