அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான இன்று (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உள்ளார். 

Advertisment

இதனையொட்டி பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று (26.07.2025) தமிழகம் வருகை தந்து உள்ளார். இந்நிலையில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாகப் பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்தடைந்தார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அங்கிருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். அதாவது சோழகங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரியில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கோயில் வரை ரோடு ஷோ நடைபெற்றது. சுமார் 4 கி.மீ. தொலைவிற்கு நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி காரில் நின்றபடியே பயணித்தார். 

Advertisment

இந்த ரோடு ஷோவின் போது சாலையின் இருபுறமும் இருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் வழிநெடுகிலும் அவருக்கு மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் இவ்வாறு சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். அதன்பின்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு செய்ய உள்ளார். அதோடு இந்தியத் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட உள்ளார். அதே சமயம் பிரதமர் மோடி முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.