தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை (23.01.2026) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்த உள்ளார். இதனையொட்டி தமிழக பாஜகவின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் என்.டி.ஏ. கூட்டணி கட்சியின் தலைவர்கள் நாளை பிரதமரோடு ஒரே மேடையில் அணிவகுக்க உள்ள நிலையில் அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் பொதுக்கூட்ட மேடையில் உள்ள பேனரில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் மதுராந்தகத்தில்  பிரதமர் தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்கூட்ட மேடையில் பாமகவின் சின்னமான மாம்பழ சின்னம் இடம் பெற்றுள்ளது. அதாவது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் பிளவுப்பட்ட பாமகாவில் யாருக்கு மாம்பழ சின்னம் என்பது முடிவாகாத நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் மாம்பழ சின்னம் இடம் பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது. 

Advertisment

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்ட குக்கர் சின்னமும் மேடையில் இடம் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த பேனரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம்,  தேமுதிக பொதுச் செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ramadoss-vs-anbumani-eci

மற்றொறுபுறம் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கட்சியில் அதிகாரத்தை யார் கட்டுப்படுத்துவது, பாமகவின் தலைவர் யார் என்கிற மோதலானது வெளிப்படையாக இருந்து வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி கடந்த 7ஆம் தேதி (07.01.2026) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக - அதிமுக - பாமக இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisment