தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நேற்று முன்தினம் (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் கார் வெடிப்பு வழக்கைத் தேசிய புலனாய்வு முகமையிடம் (N.I.A. - National Investigation Agency) நேற்று (11.11.2025) உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இதனையடுத்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் தங்கள் வசம் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆவணங்கள் என அனைத்து ஆதாரங்களையும் நேற்று தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை விசாரிக்க 10 பேர் கொண்ட மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனையடுத்து 10 பேரும் செங்கோட்டைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு காரில் இருந்த வெடிகுண்டுகளே காரணம் என டெல்லி போலீசார் உறுதிப்படுத்தியிருந்தனர். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாகச் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (Unlawful Activities (Prevention) Act - UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதோடு பி.என்.எஸ். (BNS) வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/12/dl-car-ins-file-2025-11-12-15-52-46.jpg)
இந்நிலையில் கார் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். பூட்டானில் இருந்து இந்தியா திரும்பிய அவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக லோக்நாயக் மருத்துவமனைக்குச் சென்று அங்குச் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்த து தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை எல்.என்.ஜே.பி. மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us