நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று (28-07-25) நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் உள்ளிடோர் பேசினர். அதே சமயம், மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் இன்று முதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று (29-07-25) மக்களவையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், “மே 10ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் தனது நடவடிக்களை நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. இது தொடர்பாக இங்கு நிறைய விஷயங்கள் கூறப்பட்டன. எல்லைக்கு அப்பால் இருந்து பரப்பப்பட்ட அதே பிரச்சாரம் இதுதான். மே 9 ஆம் தேதி இரவு, அமெரிக்க துணை ஜனாதிபதி என்னுடன் பேச முயன்றார். அவர் ஒரு மணி நேரம் முயற்சித்தார். ஆனால் நான் எனது ராணுவத்துடனான சந்திப்பில் இருந்ததால் அவரது அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. பின்னர், நான் அவரை திரும்ப அழைத்தேன். பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலை நடத்தப் போகிறது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி தொலைபேசியில் என்னிடம் கூறினார்.  பாகிஸ்தானுக்கு இந்த நோக்கம் இருந்தால், அது அவர்களுக்கு நிறைய இழப்பை ஏற்படுத்தும் என்பதே எனது பதில். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், நாங்கள் ஒரு பெரிய தாக்குதலை நடத்துவதன் மூலம் பதிலடி கொடுப்போம். இதுதான் எனது பதில்.

பயங்கரவாதிகள் அழுகிறார்கள், அவர்களின் மூளையாக இருப்பவர்கள் அழுகிறார்கள், அவர்கள் அழுவதைப் பார்த்து, சிலர் இங்கேயும் அழுகிறார்கள். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது அவர்கள் ஒரு விளையாட்டை விளையாட முயன்றார்கள், அது பலனளிக்கவில்லை. விமானத் தாக்குதலின் போது, அவர்கள் வேறு ஒரு விளையாட்டை விளையாட முயன்றார்கள். அதுவும் பலனளிக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோது அவர்கள் ஒரு புதிய தந்திரத்தை கையாண்டார்கள். நீங்கள் ஏன் நிறுத்தினீர்கள்? எனக் கேட்டார்கள். எதிர்க்க உங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் தேவை. எனவே, நான் மட்டுமல்ல முழு நாடும் உங்களைப் பார்த்து சிரிக்கிறது. ஒருபுறம், இந்தியா தன்னிறைவை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் காங்கிரஸ் பிரச்சினைகளுக்கு பாகிஸ்தானைச் சார்ந்து மாறி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் பாகிஸ்தானிலிருந்து பிரச்சினைகளை இறக்குமதி செய்கிறது.

பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் ஒரு குற்றச்சாட்டை வழங்கியதில் நாடு ஆச்சரியப்படுகிறது. பஹல்காமின் பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரம் கொடுங்கள். காங்கிரஸ் கூறுவதையே பாகிஸ்தானும் கோருகிறது. ஆயுதப் படைகளை எதிர்ப்பது, ஆயுதப் படைகள் மீதான எதிர்மறை எண்ணமும் காங்கிரஸின் பழைய மனப்பான்மையாக இருந்து வருகிறது. பாகிஸ்தானின் அனைத்து அறிக்கைகளையும், இங்கே நம்மை எதிர்ப்பவர்களின் அறிக்கைகளையும் சுருக்கமாக பாருங்கள், அவை ஒரே மாதிரியாக உள்ளன. காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு ஒரு சுத்தமான சிட் கொடுத்ததில் நாடு ஆச்சரியப்படுகிறது. பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் கேட்க அவர்கள் துணிகிறார்கள். நேற்று, நமது பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் மகாதேவ் மூலம் பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்தினார்கள்” எனப் பேசினார்.