நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செங்கோட்டையின் கொத்தளத்திற்கு வருகை தந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாகத் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், வளர்ந்த பாரதத்தை (Viksit Bharat) கட்டியெழுப்பவும் இன்னும் கடினமாக உழைக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். ஜெய் ஹிந்த்”எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.