‘இந்தியா இறந்த பொருளாதாரம்’ என விமர்சித்த டிரம்ப்; பிரதமர் மோடி மறைமுக பதில்!

trumpmodi

PM Modi gives indirect response after Trump calls India a dead economy

ரஷ்யாவுடன் ஒப்பந்தும் செய்துள்ளதால் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த 30ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தத்தின் டிரம்ப் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். ஆனால், பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட அதற்கு பதிலளிக்கவில்லை. உலக தலைவர்கள் யாரும் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தவில்லை என மக்களவையில் பிரதமர் மோடி ஆணித்தரமாக பேசிய அடுத்த நாளே, தனது வேண்டுகோளின் பேரில் இந்தியா பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என டிரம்ப் 30வது முறை பேசி மீண்டும் பரப்பரப்பை கிளப்பினார். மேலும், இரு நாடுகளும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு ரூ.25% வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே, இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து தனது தளமான ட்ரூத் சோசியலில், ‘இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. இரு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது. இரு நாடுகளும் தங்களின் இறந்த பொருளாதாராத்தை ஒன்றாக கொண்டு வர முடியும். நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வணிகத்தைச் செய்துள்ளோம். அவற்றின் கட்டணங்கள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. அதே போல், ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து எந்த வணிகத்தையும் செய்யவில்லை. அதை அப்படியே வைத்திருப்போம்’ என்று தெரிவித்திருந்தார். இந்தியாவின் பொருளாதாரம் இறந்துபோய்விட்டதாக டிரம்ப் விமர்சித்து பேசியிருந்தது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இத்தகைய களேபரம் நடந்து வரும் நிலையில் டிரம்ப் விதித்த அபராதத்துடன் கூடிய வரி விதிப்பு குறித்தோ, இந்தியாவை கடுமையாக விமர்சிப்பது குறித்தோ பிரதமர் நரேந்திர மோடி எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில், இந்தியா பொருளாதாரம் செத்துபோய்விட்டதாக டிரம்ப்பின் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக பதிலளித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (02-08-25) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “அனைத்து நாடுகளும் தங்கள் தனிப்பட்ட நலன்களில் கவனம் செலுத்துகின்றன. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது. அதனால், இந்தியா அதன் பொருளாதார நலன்களைப் பொறுத்தவரை விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே நாங்கள் வாங்குவோம். உள்ளூர் பொருட்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். நாடு சிறந்தவையாக மாற விரும்புபவர்கள், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக பார்க்க விரும்புபவர்கள் என எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சுதேசி தயாரிப்புகளுக்கான தீர்மானத்தை விதைக்க வேண்டும்.

நமது விவசாயிகள், நமது சிறு தொழில்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அவர்களின் நலன் தான் நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். நாட்டின் நலனுக்காக அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இருப்பினும், குடிமக்களாக நமக்கு சில பொறுப்புகள் உள்ளன. வணிக சமூகத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன், உலகம் நிலையற்ற தன்மையைக் கடந்து செல்கிறது, மேலும் நாம் சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதற்கு உறுதியளிக்க வேண்டும்” என்று கூறினார். 

donald trump Narendra Modi tariff uttar pradesh
இதையும் படியுங்கள்
Subscribe