அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழிஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான இன்று (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இதனையொட்டி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாகப் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார். இதனையடுத்து பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இதனையடுத்து வாரணாசி கங்கை நீரைக் கொண்டு சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் மற்றும் சிதம்பரம் மங்களை தொகுதி எம்.பி., திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதில் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார். அப்போது ‘ஓம் சிவோஹம்’ என்ற பாடலைக் கேட்டு இளையராஜாவைப் பிரதமர் மோடி பாராட்டினார். அதோடு இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சியை மனமுருகி பிரதமர் மோடி ரசித்தார். அதோடு 4ஆம் திருமுறை மற்றும் ஓதுவார்கள் பாடிய திருப்புகழ் பாடலை கேட்டு பிரதமர் மோடி ரசித்தார். சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனைக் கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடி நினைவு நாணயத்தை வெளியிட்டார். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி “வணக்கம் சோழ மண்டலம்” எனக் குறிப்பிட்டுப் பேசுகையில், “இது ராஜராஜனின் நம்பிக்கை பூமி. இளையராஜா நம் அனைவரையும் இந்த நம்பிக்கை பூமியில் சிவ பக்தியில் மூழ்கடித்தார். நான் காசியின் எம்.பி. ‘ஓம் நமச்சிவாய’ என்று கேட்டாலே எனக்கு நெஞ்சு பதைபதைக்கிறது.
பிரகதீஸ்வர பகவானின் பாதங்களில் நின்று வணங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலில் நான் பிரார்த்தனை செய்துள்ளேன். அனைவருக்கும் சிவபெருமானின் ஆசிகள் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.சோழ மன்னர்கள் இலங்கை, மாலதீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளுடன் தங்கள் இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளைக் கணிசமாக மேம்படுத்தினர். நான் நேற்று (26.07.2025) மாலத்தீவிலிருந்து திரும்பிய நிலையில் ஒரு தற்செயல் நிகழ்வாக இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி.
இந்தியாவின் பொற்காலங்களில் சோழப் பேரரசு ஒன்று என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். சோழப் பேரரசு, இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்ற பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் சென்றது. ஜனநாயகத்தின் பெயரால் பிரிட்டனின் மாக்னா கார்ட்டா பற்றி வரலாற்றாசிரியர்கள் பேசுகிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சோழப் பேரரசில் ஜனநாயக முறை மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மற்ற இடங்களை வென்ற பிறகு தங்கம், வெள்ளி அல்லது கால்நடைகளைக் கொண்டு வந்த பல மன்னர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்தார்” எனப் பேசினார்.