காங்கிரஸில் பல இளம் தலைவர்கள் திறமையானவர்களாக இருக்கின்றனர், ஆனால் ராகுல் காந்தி குடும்பத்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

Advertisment

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று இன்று நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குப்படுத்துதல் மசோதா, கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட முதலமைச்சர்கள், அமைச்சரள் 30 நாட்களுக்கு சிறையில் அல்லது காவலில் இருந்தால் அவர்களை பதிவி நீக்கம் செய்யும் மசோதா, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இதில், ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குப்படுத்துதல் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தவுடன் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேநீர் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆன்லைன் சூதாட்ட தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டதை பாராட்டிப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவர், “எதிர்க்கட்சியில் குறிப்பாக காங்கிரஸில் உள்ள பல இளம் தலைவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஆனால், குடும்ப பாதுகாப்பின்மை காரணமாக அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. இதுபோன்ற இளம் தலைவர்கள் இருப்பது ராகுல் காந்தியைப் பாதுகாப்பற்றதாகவும் பதற்றமாகவும் உணர வைக்கக்கூடும். ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குப்படுத்துதல் மசோதா, தொலைநோக்கு தாக்கத்தை கொண்ட ஒரு சீர்திருத்தம். முக்கிய சட்டங்கள் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சிகள் விலகி இருக்கின்றனர். அவர்கள் இடையூறுகளை உருவாக்குவதில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர்” எனக் காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.