மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவி வகித்து வந்தவர் அஜித் பவார். இத்தகைய சூழலில் தான் பூனே மாவட்டத்தில் உள்ள பாராமதி என்ற இடத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் மும்பையில் இருந்து சிறிய ரக தனி விமானத்தில் இன்று (28.01.2026) பயணம் மேற்கொண்டார். அதன்படி இந்த விமானம் காலை 08.45 மணியளவில் பாராமதியில் தரையிறங்க முயன்றது.
அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த விபத்தில் சிக்கிய விமானம் தீ பற்றி எரிவது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் அஜித் பவார் மரணம் அடைந்தார். மேலும் 2 உதவியாளர்கள் (தனி பாதுகாப்பு உதவியாளர் மற்றும் உதவியாளர்) மற்றும் 2 பணியாளர்கள், துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழ்ந்தனர். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த துயரமான விமான விபத்து வருத்தமளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில், துயரமடைந்த குடும்பங்களுக்கு வலிமையையும் தைரியத்தையும் அளிக்க பிரார்த்திக்கிறேன். அஜித் பவார் மக்கள் தலைவராக இருந்தார். அடித்தள மக்களுடன் வலுவான தொடர்பை அவர் கொண்டிருந்தார். மகாராஷ்டிரா மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்த ஒரு கடின உழைப்பாளி ஆளுமையாக அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/28/modi-ajit-pawar-1-2026-01-28-11-08-46.jpg)
நிர்வாக விஷயங்களைப் பற்றிய அவரது புரிதலும், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வமும் குறிப்பிடத்தக்கவை. அவரது அகால மறைவு மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ஆதரவாளார்களுக்கும் இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழ்ந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us