மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப் போட்டியில் பிரிந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றாக சேர்ந்திருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இந்த மொழி சர்ச்சைக்கு மத்தியில், மராத்தியில் பேசலாமா என்றும் மாநிலங்களவை உறுப்பினரிடம்  பிரதமர் மோடி கலகலப்பாக பேசியுள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் உஜ்வல் நிகாம், தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பிரதமர் மோடி மராத்தியில் பேசத் தொடங்கினார். இந்தியில் பேசலாமா அல்லது மராத்தியில் பேசலாமா என்று மராத்தியில் கேட்டார். நான் சிரிக்க ஆரம்பித்தேன். நான் சிரிப்பதைக் கேட்டு, பிரதமர் மோடியும் சிரிக்கத் தொடங்கினார். இந்தியை ஏற்றுக்கொண்டதால் எனது வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.” என்றார்.

முன்னதாக, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே சேனா கட்சியினர் மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சியினர் ஆகியோர் ஒரு புலம்பெயர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மராத்தியில் பேச மறுத்ததால் அவரை அடித்து தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ மகாராஷ்டிராவில் சர்ச்சையான நிலையில் பிரதமர் மோடி தற்போது கலகலப்பாக பேசியுள்ளார்.