கோவா மாநிலத்தில் உள்ள வடகோவாவின் அர்போரா பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிரபல இரவு பொழுதுபோக்கு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த விடுதியில் நேற்று (06.12.2025) இரவு எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விடுதியில் இருந்த 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வடகோவா மாவட்டத்தில், விலைமதிப்பற்ற உயிர்களை பலிகொண்ட சோகமான தீ விபத்தால் மிகுந்த வேதனை அடைந்தேன். துக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த கடினமான நேரத்தில் அவர்கள் பலம் பெறட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவா மாநிலம் ஆர்போராவில் நடந்த தீ விபத்து மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நிலைமை குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்திடம் பேசினேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவரண (PMNRF) நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோவா எம்எல்ஏ மைக்கேல் லோபோ மாநிலத்தில் உள்ள அனைத்து கிளப்புகளிலும் பாதுகாப்பு தணிக்கை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
Follow Us