மதிப்பு கூட்டு வரி (VAT - Value Added Tax), சேவை வரி, கலால் வரி, சுங்கவரி உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து, ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கொள்கையை முன்னிறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி (01.07.2027) ஜி.எஸ்.டி. (GST - Goods and Services Tax) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 0%, 5%, 12%, 18% மற்றும் 28% என 5 வரி விகிதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நாட்டின் 79வது சுதந்திர தின விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி (15.08.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையின் கொத்தளத்திற்கு வருகை தந்து தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், “ஜி.எஸ்.டி. 2.0 மறுசீரமைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என்ற 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட உள்ளன. அதே சமயம் புகையிலை, மது போன்ற பொருட்களுக்கு மட்டும் 40 % வரி விதிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (21.09.2025) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், “நாளை (22.09.2025) முதல் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது. உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளிலிருந்தே, நாடு, வளர்ச்சியடைந்த இந்தியாவை (ஆத்மநிர்பர் பாரதத்தை) நோக்கி ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது.
நவராத்திரியின் முதல் நாளான நாளை, சூரிய உதயத்துடன் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும். நாடு முழுவதும் நாளை முதல், ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா (ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்) தொடங்கும். இதனால் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். எனவே உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்க முடியும். ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பயனளிக்கும்” எனப் பேசினார்.