பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றம் சாட்டி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கியதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 7.9 கோடி வாக்காளர்களை கொண்ட பீகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வரலாற்றில் அதிக அளவிலான வாக்காளர்களின் பெயர்களை நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பின்தங்கிய மற்றும் கருத்து வேறுபாடு கொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பாஜகவுக்கு ஆதரவாக சமநிலையை சாய்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

Advertisment

ஒரு காலத்தில் தனக்கு வாக்களித்த அதே வாக்காளர்கள் இப்போது தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று டெல்லி ஆட்சிக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் வாக்களிப்பதை முற்றிலுமாகத் தடுக்க முயற்சிக்கிறது. எங்களை தோற்கடிக்க முடியாவிட்டால், நீங்கள் எங்களை நீக்க முயற்சிக்கிறீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். நமது ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்ளும்.

தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் எழுப்பும். அரசியலமைப்பில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனும் இந்த அநீதியை எதிர்க்க நம்மிடம் உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம். இது ஒரு மாநிலத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது நமது குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது. ஜனநாயகம் மக்களுக்கு சொந்தமானது. அது திருடப்படாது' என தெரிவித்துள்ளார்.