தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில், மத்திய அமைச்சரும், அண்மையில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினர் இன்று (23.12.2025) சென்னைக்கு வந்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பியூஸ் கோயல் தலைமயிலான அக்குழு ஆலோசனை நடத்தியது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் இடம்பெற்றனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் டிடிவியின் அமமுகவையும், ஓபிஎஸ்-இன் தொண்டர்கள் மீட்பு இயக்கத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் கொடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியை அகற்ற அதிமுக ஒன்றிணைவு தேவை என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்துவருவதாக பல நேரங்களில் தகவல்கள் கசிந்த நிலையில் அதனை சாத்தியப்படுத்தும் வகையில் பியூஸ் கோயல் அன்ட் குழுவினருடனான பேச்சுவார்த்தையில் இந்த தீர்வு எட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் அதிமுகவில் டி.டி.வி.தினகரன் மற்றும் ஓபிஎஸ்-ஐ சேர்ந்து கொள்ள வாய்ப்பில்லை எனவும் என்டிஏ கூட்டணியில் வேண்டுமானால் அவர்கள் அங்கம் வகிக்க சம்மதம் என எடப்பாடி பழனிசாமி பியூஷ் கோயலிடம் இசைந்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி கூட்டணிக்கு வந்தால் டிடிவிக்கு இந்த தேர்தலில் 6 சீட்டுகளும், ஒபிஸ்க்கு 3 சீட்டுகளும், தேமுதிக வந்தால் 6 சீட்டுகளும் கொடுக்கலாம் எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றும் அவரை முதல்வராக எடுத்துச்செல்லும் கூட்டணியில் தான் அங்கம் வகிக்க வாய்ப்பில்லை என்றும் செய்தியாளர் சந்திப்புகளில் டி.டி.விதினகரன் தெரிவித்து வரும் நிலையில் இதைப்பற்றிய அவரது கருத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேமுதிக ஜனவரியில் தான் நிலைப்பாட்டை அறிவிப்போம் என தெரிவித்திருந்தது. மறுபுறம் பாமகவில் பிளவால் ஏற்பட்ட குழப்பங்கள் மேலோங்கி இருக்கிறது.
இதனால் பெரிய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்ற எடப்பாடியின் கனவும் தேய்ந்து வரும் நிலையில் முன்னரே தெரிந்த டிடிவி, ஓபிஎஸ்-ஐ கூட்டணிக்குள் கொண்டு வர வீராப்பை எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் தளர்த்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/23/163-2025-12-23-18-01-06.jpg)