தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, நாளை (23.01.2025) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளைக் கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த உள்ளது.
அதற்காக அதிமுக - பா.ஜ.க ஆகிய கட்சிகள் பிற கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் அழைத்து வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கெனவே அன்புமணி தரப்பு பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், நேற்று அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் நேற்று இணைந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று (22-01-26) சந்தித்துப் பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வந்த பியூஷ் கோயல், அவருடன் அதிமுக - பா.ஜ.க இடையேயான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் உடன் இருந்தனர். அவர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி காலை விருந்து அளித்தார்.
அதனை தொடர்ந்து பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பியூஷ் கோயல் கூறியதாவது, “அதிமுக கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து காலை உணவு உண்ணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பிரதமரின் தலைமையிலும் தமிழ்நாட்டில் பழனிசாமியின் தலைமையிலும் உருவான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஊழல் நிறைந்த, திறமையற்ற மற்றும் வளர்ச்சிக்கு எதிரான திமுக அரசை முற்றிலுமாகத் தூக்கி எறியும் என்று நான் நம்புகிறேன். இந்தத் தேர்தலில் திமுக அரசு நிச்சயமாகத் தோற்கும். தேச விரோத கருத்துக்களுக்காக உதயநிதி ஸ்டாலினை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். அவரது வெறுப்புப் பேச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட வேண்டும், மேலும் இந்த வெறுப்புப் பேச்சுக்காகவும், மக்களைப் பிரித்து வகுப்புவாத ஒற்றுமையை ஏற்படுத்தியதற்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் நாளை தமிழகத்திற்கு வருகை தருவது குறித்து நாங்கள் அனைவரும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். ஒரு பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆட்சிக்கு வந்து மாநிலத்தின் எதிர்காலத்தை மாற்றப் போகும் பிரதமரையும், எடப்பாடி பழனிசாமியையும், வலுவான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் சந்திக்க தமிழகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். உள்கட்டமைப்பு, மேம்பாடு, நல்லாட்சி ஆகியவற்றை நாங்கள் கொண்டு வருவோம். மேலும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும் நாங்கள் பாடுபடுவோம். இதனால் தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை மகிமையடையும், தமிழ் கலாச்சாரத்தையும் பெருமையையும் மீட்டெடுப்போம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/piy-2026-01-22-11-00-01.jpg)