தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனத் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை மறுநாள் (23.01.2025) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளைக் கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த உள்ளது.
இதனையொட்டி தமிழக பாஜகவின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பியூஸ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள காட்டங்கொளத்தூரில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தருடன், பியூஸ் கோயல் சந்தித்துப் பேசினார். அதோடு அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவையும் சந்தித்துப் பேசினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது நயினார் நாகேந்திரன், எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது தொடர்பாக பாரிவேந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகிற 23ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநாடு மதுராந்தகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என் அருமை நண்பர் பியூஷ் கோயல் நீண்ட காலமாக என்னோடு பழக்கமும் தொடர்பும் உள்ளவர். அந்த வகையில் இன்றைக்கு அந்த மாநாட்டுத் திடலைப் பார்ப்பதற்காக பியூஸ் கோயல், மாநில தலைவரோடு சேர்ந்து பார்த்துவிட்டு வருகிற வழியில் உள்ள உணவகத்தில் அவர்களுக்கு வரவேற்று டீ கொடுத்து என்னுடைய பழைய நண்பரைப் பார்ப்பது போன்ற உணர்வோடு அவரை நான் வரவேற்றேன்.
எங்களோடு உணவு உண்டார். டீ சாப்பிட்டார். எங்களுடைய நட்பும் உறவும் எப்பொழுதுமே தொடரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் கடந்த 2014இல் இருந்து தொடர்கிறேன். அதோடு மட்டுமல்ல இந்திய ஜனநாயக கட்சி துவக்கத்திலிருந்து நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மட்டுமே இருக்கிறேன். மாற்றமில்லை. அந்த வகையிலே அன்பிற்குரிய மோடியும், அவருடைய அமைச்சர் குழாமும் எப்போதுமே என்மேல் தனிப்பட்ட அன்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் நாங்கள் அவர்களை என்றுமே இந்த நாட்டிற்கு உழைக்கிற அவர்களுக்கு ஆதரவாக (சப்போர்ட்டாக) கூடவே இருப்போம் என்பது இந்த நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.
அந்த வகையில்தான் இன்றைக்கு வரவேற்றோம். பியூஸ் கோயாலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், ‘23ஆம் தேதி மாநாட்டிற்கு வரவேண்டும். மோடியோடு நீங்கள் இருக்க வேண்டும்’ என்ற வேண்டுகோளையும் வைத்தார்கள். அந்த வகையில் 23வது நடக்கிற மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நான் மேடையில் இருப்பேன்” எனத் தெரிவித்தார்.
Follow Us