இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதி கனமழையும், அதைத் தொடர்ந்து வந்த புயல் ‘டிட்வா’வும் நாட்டின் தெற்கு, தென்கிழக்கு பகுதிகளை முழுவதுமாக புரட்டிப் போட்டுள்ளன. நவம்பர் 27, 2025 முதல் தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. கெலானி ஆறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உபரி நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, மின் தடை, சாலை மறியல் என அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன.
இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவலின்படி 212 பேர் உயிரிழந்துள்ளனர், 200க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் 2 லட்சம் பேர் 1,275 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கந்தி, படுல்லா, குருநாகல், காலி, ரத்னபுரி மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, உணவு, குடிநீர், மருந்து கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்தப் பேரிடரை எதிர்கொல்லும் வகையில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க நாடு தழுவிய அவசரநிலை பிரகடனம் செய்தார். இதனால் ராணுவம், விமானப்படை, காவல்துறை என அனைத்துப் படைப்பிரிவுகளும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள், படகுகள், உயரமான வாகனங்கள் என அனைத்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த மீட்புப் பணியின்போதே நடந்த வேதனைக்குரிய சம்பவம் ஒன்று மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வென்னப்புவ பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு, மருந்து வழங்கியும், மாடியில் தஞ்சம் அடைந்திருந்தவர்களை மீட்டும் வந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (Nirmal Siyambalapitiya) ஓட்டிச் சென்ற பெல்-212 ரக ஹெலிகாப்டர் துரதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளானது. அதில் விமானி நிர்மல் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த விமானத்தில் இருந்த மற்ற வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களைக் காக்கும் உன்னதப் பணியில் தன் உயிரையே தியாகம் செய்த விங் கமாண்டர் நிர்மல் மறைவு இலங்கை மக்கள் அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “அவர் எங்களுக்கு ஒரு தலைவர் மட்டுமல்ல, சகோதரனும் கூட” என்று அவரது சக வீரர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/01/5-2025-12-01-18-24-38.jpg)